இந்திய அரசின் "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டம் சில்லாகுளம் முத்துக்கருப்பன் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தமர்வு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலர் பிரேமலதா வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் நிர்மலா தலைமை தாங்கினார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் காந்திமதி கலந்துகொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறையின் பங்கு குறித்தும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் நோக்கம், பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் பேசினார்.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, அவசரகால உதவிகளைப் பெறும் வழிமுறைகள், இணையவழி (டிஜிட்டல்) குற்றங்கள் மற்றும் இணையவழி துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பது, சமூக ஊடகங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு விபரங்கள் குறித்து மாணவிகளுக்கு விரிவான விழிப்புணர்வை வழங்கினார்.
தொடர்ந்து, மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் க.க. நிவேதிதா பாலியல் ரீதியான தொந்தரவுகளைத் தடுப்பது, குழந்தைத் திருமணத்தின் தீமைகள், குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் அரசு செயல்படுத்தி வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் முக்கியப் பகுதியாகக் குழந்தைத் திருமணத்திற்கு எதிரான உறுதிமொழியை அனைத்து மாணவிகளும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் நிதி கல்வியறிவு வல்லுநர் ஜெயலட்சுமி, பாலின நிபுணர் முருகப்பெருமாள், கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனர்.